பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்துக்கு பிரபல ஆடை வடிவமைப்பாளர் நன்கொடை!


இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் மைக்கேல் கோர்ஸ் 2.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை வழங்கியுள்ளார்.

அவரின் இந்த செயலை ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) வரவேற்றுள்ளது.

நீண்டகாலமாக செயற்பட்டு வரும் பட்டினியை போக்கும் கண்காணிப்பு பிரச்சாரத்தின் (Watch Hunger Stop campaign) மூலம் வழங்கப்படும் இந்த பங்களிப்பு, உலக உணவுத் திட்டத்தின் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை (HGSF) ஊக்குவிக்க பங்களிக்கும்.

இந்த நிதி, பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை எட்டு மாவட்டங்களிலிருந்து பத்து மாவட்டங்களாக விரிவுபடுத்த உதவும், இது அடுத்த மூன்று ஆண்டுகளில் 250,000 மாணவர்கள் நாளாந்தம் போசாக்கான உணவைப் பெறுவதை உறுதி செய்யும் என உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இந்த நிதி 1,500 உள்ளூர் விவசாயிகளையும், உணவுப் பரிமாறுபவர்களையும் மற்றும் உள்ளூரில் இருந்து பெறப்பட்ட தரமான விளைபொருட்களை வழங்குவதையும் ஊக்குவிக்கும்.

2003 ஆம் ஆண்டு முதல் உலக உணவுத் திட்டம் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை செயற்படுத்தி வருகிறது.

2021 ஆம் ஆண்டில், அரசாங்கம் உலக உணவுத் திட்டம் தலைமையிலான உலகளாவிய பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் கூட்டணியில் இணைந்தது.

பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியது. பாடசாலை மாணவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடுகளை போசாக்கான உணவுகள் மூலம் நிவர்த்தி செய்வதை உறுதி செய்வதற்கு உலக உணவுத் திட்டம் தொழில்நுட்ப மற்றும் திறன் மேம்பாட்டு உதவிகளை வழங்குகிறது.