தேயிலைச் செய்கைக்கு QR முறையூடாக உர விநியோகம்!


தேயிலைச் செய்கையாளர்களுக்கு தாமதமின்றி உரிய நேரத்தில் தட்டுப்பாடில்லாமல் உரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், தேயிலைச் சபை மூலம் அதற்காக 2000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. 

உரமானியத்தை QR குறியீடு முறை மூலம் பெற்றுக்கொடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை 26ஆம் திகதி ஆரம்பமாகு மென பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் அஜந்த கம்மெத்தகே எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘‘பெருந்தோட்ட கைத்தொழில் துறையில் தேயிலை செய்கை அண்மைக்காலமாக வீழ்ச்சியடைந்துள்ளது. முக்கியமாக உரம் தொடர்பான பிரச்சினையே அதற்கு காரணமாகியது. கடந்த காலங்களில் உரம் இல்லாத காரணத்தினால் முழுமையான விவசாயத்துறையும் பெரும் வீழ்ச்சிக்குள்ளானது. மேற்கொண்ட தீர்மானங்கள் உரத்தை இல்லாமல் செய்ததால் பெரும் நெருக்கடியை எதிர்நோக்க நேர்ந்தது. அந்த வகையில் தேயிலைப் பயிர்ச் செய்கையும் வீழ்ச்சியடைந்ததுடன் கடந்த வருடத்தில் அதற்காக நாம் உரம் வழங்கினோம்.

அதன்போது ஒரு நிறுவனத்தின்மூலம் மட்டுமே உரம் விநியோகிக்கப்படுவதாகவும் உரம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் மக்கள் மத்தியிலிருந்து பிரச்சினைகள் எழுந்தன. ஏனைய நிறுவனங்களிடமிருந்து உரத்தை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் சில தரப்பினர் யோசனைகளை முன்வைத்தனர்.

அதனையடுத்து, சகல யோசனைகளையும் கவனத்திற்கொண்டு உரம் விநியோகிப்பதில் புதிய முறைமை ஒன்றை உருவாக்குவதற்காக நாம் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக் கொண்டோம். அத்துடன் 2025ஆம் ஆண்டுக்கான உர நிவாரணத்துக்காக தேயிலை சபை மூலம் 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளோம்.

நாட்டில் நூற்றுக்கு 75 சதவீதமான தேயிலை சிறு தேயிலைத் தோட்ட பயிர்ச்செய்கை மூலமாகவே பெற்றுக்கொள்ளப்படுகிறது. அந்த பயிர்ச்செய்கைகளை இலக்காகக் கொண்டு தேயிலை உரமானியத்தை வழங்குவதற்கு தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதனை QR குறியீடு முறைமூலம் பெற்றுக் கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அரசாங்க உரக் கூட்டுத்தாபனம், உரம் தொடர்பான தேசிய செயலகம் மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள பல உர நிறுவனங்கள் மூலம் விவசாயிகள் தாராளமாக உரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

அந்த வகையில், அதற்கான QR குறியீடு முறை வழங்குவதை எதிர்வரும் 26ஆம் திகதி முதற் கட்டமாக களுத்துறை, மத்துகம பிரதேசத்தில் ஆரம்பிப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்.

அதன் மூலம் தேவையான காலத்தில் உரிய முறையில் விவசாயிகளுக்கு உரத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றும் அவர் தெரிவித்தார்.