பாடசாலை மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்திய ஆசிரியைக்கு பிணை!


கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியை ஒருவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிமா பிரேமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ஆசிரியையை 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆசிரியை பாடசாலையின் நூலகத்தில் வைத்து 13 வயது பாடசாலை மாணவன் ஒருவனிடம் பாட புத்தகம் தொடர்பில் கேள்வி கேட்டுள்ளார்.இதன்போது இந்த மாணவன் ஆசிரியையின் கேள்விக்கு பிழையான பதிலை அளித்துள்ளார்.இதனால் கோபமடைந்த ஆசிரியை பாடசாலை மாணவனை தாக்கியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் சந்தேக நபரான ஆசிரியை கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த பாடசாலை மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்ட நீதவான் ஆசிரியையை பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.