நாட்டில் IVF முறையில் பிறந்த முதலாவது குழந்தை!


இலங்கையின் அரச வைத்தியத்துறையில் செயற்கை கருத்தரிப்பு முறையில் (IVF) வெற்றிகரமாக முதலாவது குழந்தை நேற்றையதினம் (31) ராகமவில் உள்ள வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் பிறந்துள்ளது.

இந்த குழந்தை சிசேரியன் மூலம் பிறந்துள்ளது. இந்த சம்பவம் களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் IVF நிலையத்தின் ஒரு வருட கால முயற்சியின் விளைவாக இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பிரசவத்தின் பின்னர் 31 வயதுடைய தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த IVF செயற்கை கருத்தரிப்பு முறை முதன் முதலில் பல்கலைக்கழகத்தின் கருத்தரித்தல் மையத்தில் மேற்கொள்ளப்பட்டது.

அரசாங்கம் நடத்தும் IVF திட்டத்திற்குப் பின்னர் அரசாங்க வைத்தியசாலையில் குழந்தை ஒன்று பிறப்பது இதுவே முதல் முறை ஆகும்.

களனி பல்கலைக்கழகத்தின் ஆலோசகர் மகப்பேறியல் மற்றும் மகளிர் வைத்திய நிபுணர் பேராசிரியர் ரசிக்கா ஹேரத் தலைமையிலான மருத்துவக் குழுவால் சிசேரியன் செய்யப்பட்டுள்ளது.

இந்த சாதனை, அதே பீடத்தைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளரும் கருத்தரித்தல் வைத்தியர் நிபுணர் சுரங்க ஹெட்டிபத்திரண தலைமையிலான மருத்துவக் குழுவால் நடத்தப்பட்ட அரசாங்க கருத்தரித்தல் மையத்தில் நடத்தப்பட்ட முதலாவது வெற்றிகரமான IVF கருத்தரிப்பு என்பதிலும் குறிப்பிடத்தக்கது.