தனது நிறுவனத்துக்கு சொந்தமான இயந்திரங்களை விற்பனை செய்து, பல இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த ஊழியர் கைது!
தனது நிறுவனத்துக்கு சொந்தமான நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் தொலைக்காட்சிப்பெட்டிகளை விற்பனை செய்து 70 இலட்சத்து 37 ஆயிரத்து 400 ரூபா பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் ஊழியர் ஒருவர், களனி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
களனி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கொடகல பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் குறித்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில் தனது நிறுவனத்துக்கு சொந்தமான நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் தொலைக்காட்சிப்பெட்டிகளை விற்பனை செய்து,
நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய 70 இலட்சத்து 37 ஆயிரத்து 400 ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து 35 நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் 13 தொலைக்காட்சிப்பெட்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நாளை புதன்கிழமை (30) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களனி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.