நாமல் ராஜபக்ஷவுக்குப் பிணை!
மாலைதீவிலிருந்து நாட்டிற்கு வந்து இன்று (29) நீதிமன்றத்தில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு ஹம்பாந்தோட்டை தலைமை நீதவான் பிணை வழங்கியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தால் நேற்று (28) பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மாலைதீவில் தனியார் நிகழ்வொன்றில் கலந்து கொள்ள சென்றதால் விசாரணைக்கு ஆஜராகத் தவறியதையடுத்து, ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.
2017ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வெளிநாடுகளுக்கு வழங்கியதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின்போது, நீதிமன்ற உத்தரவை கருத்திற்கொள்ளாமல் செயற்பட்டது தொடர்பில் நாமல் ராஜபக்ச எம்.பி. உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நாமல் எம்.பி. நீதிமன்றத்தில் முன்னிலையாகாததன் காரணமாக அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று மாலைதீவிலிருந்து நாடு திரும்பிய நாமல் எம்.பி இன்று ஹம்பாந்தோட்டை நீதிமன்றில் ஆஜரானதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.