பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 3 பேர் போதை மாத்திரைகளுடன் கைது!


கொஹுவல பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர், 

அவரது வீட்டில் போதை மாத்திரைக் களஞ்சியம் ஒன்றை பராமரித்து, நாடு முழுவதும் விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், 

அவரது மனைவி மற்றும் மருந்தக உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பொரலஸ்கமுவ, பெல்லன்வில, ஜய மாவத்தைப் பகுதியில் தற்காலிகமாக வசிக்கும் இந்தக் கான்ஸ்டபிளின் வீட்டில், 150 மி.கி. போதை மாத்திரைகள் கொண்ட 21 பெட்டிகள் மற்றும் 300 மி.கி. போதை மாத்திரைகள் கொண்ட ஒரு பெட்டி என மொத்தம் 1,330,420 மாத்திரைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இராணுவ புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவலின் அடிப்படையில், இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

விசாரணைகளில், 14 ஆண்டுகளாக கொஹுவல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் இந்தக் கான்ஸ்டபிள், மருந்தக உரிமையாளரால் வழங்கப்பட்ட போதை மாத்திரைகளை தனது வீட்டில் களஞ்சியப்படுத்தி, 

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகித்து வந்தது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும், போதைப்பொருள் வைத்திருத்தல், கடத்தல், மற்றும் குற்றத்திற்கு உதவி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கான்ஸ்டபிளும் அவரது மனைவியும் 35 வயதுடையவர்கள், மருந்தக உரிமையாளர் 49 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.