முன்னாள் ஜனாதிபதிகள், எம்.பிகளுக்கான ஓய்வூதியம் விரைவில் ரத்து!


முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் (18) நெடுந்தீவுக்குச் சென்ற அமைச்சர், மக்கள் அமைப்புகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளை சந்தித்து, பிரச்சினைகள் குறித்தும், அப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார். அங்கு உரையாற்றிய அவர்,

“ஊழல் கலாசாரத்துக்கு முடிவு கட்டுவதற்காகவே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்துள்ளது. மக்களின் நலனுக்காக ஜனாதிபதி மாளிகைகள் முதலீட்டு திட்டங்களுக்கு மாற்றப்படவுள்ளன. ஐந்தாண்டு காலத்தில் நிச்சயமாக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்,” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், வறுமை ஒழிக்க சமூக சக்தி வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாடு என்ற மூன்றையும் இலக்காகக் கொண்டு செயல்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.