ஜீன்ஸ் பேண்ட் அணிவது பிடிக்காமல் காதலியின் கழுத்தை நெரித்துக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!


இந்தியாவில் ஜீன்ஸ் பேண்ட் அணிவது பிடிக்காத காதலன் தனது காதலியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காதலனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்திய மாநிலமான மஹாராஷ்டிராவில் மும்பையை சேர்ந்த 34 வயதான வினோத் குமார் என்பவர் சந்தியா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இதில், ஜீன்ஸ், டி-சர்ட் ஆடை அணிவதும் மற்ற ஆண்களுடன் சந்தியா பேசுவதும் வினோத் குமாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் அவர் சந்தியாவுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.

பின்னர், கடந்த 2019 ஒக்டோபரில் சாந்தா குரூசில் ஒரு ஹொட்டல் அறையில் வைத்து சந்தியாவின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து விட்டு வினோத் குமார் தப்பியுள்ளார்.

தப்பிச் சென்ற போது வினோத் குமார் காயமடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் பொலிஸார் அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு மும்பை செசன்ஸ் கோர்ட்டில் இடம்பெற்று வந்த நிலையில் , சந்தியா ஜீன்ஸ், பேன்ட், டி-சர்ட் அணிவது ஆகிய விடயங்களுக்கு வினோத் குமார் வெறுப்புடன் இருந்ததற்கான சாட்சியங்கள் இருந்தன.

அதன் அடிப்படையில், வழக்கு விசாரணை முடிவில் வினோத்குமார் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.