அமெரிக்க பணயக் கைதி விடுதலைக்கு மத்தியிலும் தாக்குதலை தொடரும் உறுதியில் இஸ்ரேல்!
காசாவில் இருந்து இஸ்ரேலிய அமெரிக்க பணயக்கைதியான ஈடன் அலெக்சாண்டரை ஹமாஸ் விடுவிக்கும் நிலையில் காசாவில் எந்த ஒரு போர் நிறுத்தமும் இல்லை என்றும் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அலெக்சாண்டர் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக மோதல் நிறுத்தப்படுவதாக நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
இதனையொட்டி நேற்று மதியம் தொடக்கம் ஆளில்லா விமானங்கள் மற்றும் போர் விமானங்களின் சத்தம் இன்றி காசாவில் அமைதி நிலவியதாக அங்குள்ள 3 பலஸ்தீனர்களை மேற்கோள்காட்டி ‘ரோய்ட்டர்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கான நல்லெண்ண சமிக்ஞையாகவே ஹமாஸ் அமைப்பு உயிருடன் இருக்கும் கடைசி அமெரிக்க பணயக்கைதியை விடுவிப்பதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அலெக்சாண்டரை விடுவிக்க இணங்கியதாக ஹமாஸ் அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கான தூண்டுதலாக இது இருப்பதாக அரபு மத்தியஸ்தர்களான எகிப்து மற்றும் கட்டார் குறிப்பிட்டுள்ளன.
ஹமாஸ், அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து ஆகிய 4 தரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்தே இந்த பணயக்கைதி விடுவிக்கப்படுகிறார். எனினும் காசாவில் தொடர்ந்து 59 பணயக்கைதிகள் வரை இருப்பதாக நம்பப்படுகிறது. காசாவில் போர் வெடிப்பதற்கு காரணமான 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெற்ற இஸ்ரேல் மீதான பலஸ்தீன போராளிகளின் தாக்குதலின் போதே பலரும் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
எனினும் அலெக்சாண்டர் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு மாத்திரமே இஸ்ரேல் இணங்கியதாகவும் தமது படையினர் அண்மையில் அறிவிக்கப்பட்ட படை நடவடிக்கையை தீவிரப்படுத்தும் என்றும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
‘எந்த வகையான போர் நிறுத்தம் ஒன்றுக்கும் இஸ்ரேல் இணங்கவில்லை’ என்று நெதன்யாகு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு இராணுவ அழுத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
எனினும் குறித்த பணயக்கைதியின் விடுதலைக்கு முன்னதாக இஸ்ரேல் காசாவில் நேற்று உக்கிர வான் தாக்குதல்களை முன்னெடுத்தது. வடக்கு காசாவின் ஜபலியா நகரில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மருத்துவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 29 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 94 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய தாக்குதல்களில் கொல்லப்பட்ட 4 சடலங்களும் இந்தக் காலப்பகுதியில் மீட்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காசாவில் இஸ்ரேலின் போரினால் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 52,862 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 119,648 பேர் காயமடைந்திருப்பதாக சுகாதார அமைச்சு டெலிகிராமில் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.