ரவி மோகன்-ஆர்த்தி விவாகரத்து மோதலுக்குள் குதித்த கெனிஷா – பரபரப்பை ஏற்படுத்தும் குற்றச்சாட்டு!


நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது காதல் மனைவி ஆர்த்தி இடையிலான பிரிவு தொடர்பாக தற்போது சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், ரவி மோகனுடன் நெருக்கமாக இருப்பதாக பேசப்படும் பாடகி கெனிஷா தற்போது சோஷியல் மீடியாவில் முக்கியமான விளக்கத்தை வழங்கியுள்ளார்.

ஆர்த்தி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், "எங்கள் வாழ்வில் வந்த மூன்றாவது நபர் தான் பிரிவுக்கு காரணம்" என குறிப்பிட்டு, கெனிஷாவை மறைமுகமாக சாடியிருந்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் கெனிஷாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள், அவமதிப்புக்கள் மற்றும் மிரட்டல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு பதிலளித்த கெனிஷா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் சில அவமதிப்புத் தாக்கங்களை பகிர்ந்து, அதனுடன் இவ்வாறு பதிலளித்துள்ளார்:

"நடந்த பிரச்னைகளுக்கு நான் தான் காரணம் என பொய்யான தகவல்களை பரப்புவதை நம்பினால், தயவுசெய்து என்னை நீதிமன்றத்துக்கே அழைத்து செல்லுங்கள். அங்கு உண்மை வெளிவரும். எனக்கு எதிராக வெறுப்பும், தவறான குற்றச்சாட்டுகளும் பரப்பப்படுகின்றன. தயவுசெய்து நிறுத்துங்கள்.

நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண். என்னைப் பற்றி கூறப்படும் சாபங்கள், அவமதிப்புகள், உடல்ரீதியான விமர்சனங்கள், கொலை மிரட்டல்கள் என அனைத்தும் எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளன.

கர்மா பற்றி பேசும் சிலருக்கு என்ன நடக்குமென்று பார்க்க நான் விரும்பவில்லை. ஆனால், இவை அனைத்தையும் கடவுளிடம் விட்டுவிட்டு அவரிடம் சரணடைகிறேன்."

இந்த விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், குற்றச்சாட்டுகள், பதில்கள் என பிரபலங்களின் பொது வாழ்க்கை மீதான ஊடக கவனமும் அதிகரித்துள்ளது.