அமெரிக்காவில் இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் சுட்டுக்கொலை: உலகெங்கிலும் உள்ள தூதரகங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு அறிவுறுத்தல்!


அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வைத்து 2 இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசா மக்களிற்கு உதவுவது குறித்த நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கையில் ஆண் ஒருவரும் பெண்ணும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரின் பெயர் எலியஸ் ரொட்ரிகோஸ் என தெரிவித்துள்ள பொலிஸார் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை சந்தேகநபர் ‘சுதந்திர பலஸ்தீனம்’ என கோசமிட்டார் என தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் யூத எதிர்ப்பு பயங்கரவாதத்தின் மோசமான செயல் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம் வெளியிட்டுள்ள பதிவில்,

வொஷிங்டன் டி.சியில் உள்ள யூத அருங்காட்சியகத்திற்கு அருகில் 2 இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம். குற்றவாளிகளை நீதி முன் நிறுத்துவோம் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில்,

இது யூத விரோதத்தை அடிப்படையாக கொண்டது. வெறுப்புக்கும் பயங்கரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இதுபோன்ற விஷயங்கள் நடக்கலாம் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது! கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேலின் ஐ.நா தூதர் டேனி டானன் தெரிவித்ததாவது, ‘யூத எதிர்ப்பு பயங்கரவாதத்தின் கொடூரமான செயலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இந்த குற்றச் செயலுக்குப் பொறுப்பானர்கள் மீது அமெரிக்க அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம். உலகின் அனைத்து இடங்களிலும் உள்ள இஸ்ரேலின் குடிமக்கள் மற்றும் பிரதிநிதிகளைப் பாதுகாக்க இஸ்ரேல் தொடர்ந்து உறுதியாகச் செயல்படும்’ எனத் தெரிவித்தார்.

தாக்குதலைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறினார்.