17 பெண் குழந்தைகளுக்கு ‘சிந்தூா்’ எனப் பெயா் வைப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை தொடா்ந்து, உத்தர பிரதேசத்தில் 17 பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு ‘சிந்தூா்’ எனப் பெயா் சூட்டப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 போ் உயிரிழந்தனா்.
இதனையடுத்து மே 7 ஆம் திகதி இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தான் மீது தாக்குதல் மேற்கொண்டன. இந்தத் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என பெயரிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து, உத்தர பிரதேச மாநிலம் குஷிநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மே 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு சிந்தூா் எனப் பெயா் சூட்டப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் தெரிவித்தாா்.
இது பற்றி பெண் குழந்தைகளின் தாயார் ஒருவர் கூறுகையில்,
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டதை எண்ணி பெருமிதம் கொள்கிறோம். சிந்தூா் என்பது வாா்த்தை மட்டுமல்ல, அது ஆழமான உணா்வாகும். எனவே , எனது மகளுக்கு சிந்தூா் எனப் பெயரிட முடிவு செய்தேன் என கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.