பண்டிகைக் கால பலகாரங்களின் விலைகள் உயர்வு!
சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டு காலத்தில் பாரம்பரிய இனிப்புகளின் விலை கடந்த ஆண்டை விட கணிசமாக அதிகரித்துள்ளது. பதுளையில் உள்ள இனிப்பு உற்பத்தியாளர்கள் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது எனக் கூறுகின்றனர்.
இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களில் பலகாரம், கொக்கிஸ், அதிரசம், முங்குலி, முங்கேரளி, அஸ்மி போன்ற பாரம்பரிய இனிப்புகளுக்கான தேவை குறைந்துள்ளதாகவும், விலை உயர்வே இதற்கு முக்கிய காரணம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மிட்டாய் விற்பனையாளர்களின் கூற்றுப்படி, விலை ஏற்றம் காரணமாக நுகர்வோர் முன்பு வாங்கிய அளவை விட குறைந்த அளவே இனிப்புகளை வாங்குகின்றனர்.
இந்த விலை உயர்வுக்கு பருப்பு, தேங்காய், அரிசி, தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் போன்ற மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பே முக்கிய காரணம் என உற்பத்தியாளர்கள் விளக்குகின்றனர். குறிப்பாக, பருப்பின் விலை ஒரு கிலோவுக்கு ரூ. 200 ஐ விட அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், பண்டிகைக் காலத்தில் பலகாரங்கள் தயாரிப்பதற்கான செலவு அதிகரித்துள்ளதால், உற்பத்தியாளர்கள் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.