பாட்டி மற்றும் தாத்தாவை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த பேரன்! : புத்தளத்தில் சம்பவம்


புத்தளம் மாவட்டத்தில் உள்ள சாலியவெவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட துனுமதலாவ பகுதியில், 76 வயதான பாட்டி மற்றும் 80 வயதான தாத்தா ஆகியோர் அவர்களின் 24 வயதான பேரனால் வீட்டிற்குள் வெட்டிக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மதியம் 12 மணியளவில் நடந்த இந்தக் கொலை குற்றமானது நிகழ்ந்தமைக்கான காரணம், குறித்த முதியவர்களிடம் சிறிது பணம் கேட்டு கொடுக்க மறுத்ததனால்  நடந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேக நபர் தாத்தாவையும் பாட்டியையும் கூர்மையான ஆயுதத்தால் வெட்டிக் கொன்றுவிட்டு, பின்னர் அருகிலுள்ள கடைக்குச் சென்றுள்ளார். பின்னர் சாலியவெவ பொலிஸார் மற்றும் உள்ளூர்வாசிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரும் இறந்த தாத்தா பாட்டியும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர், இறந்தவர்கள் டி.எம். மாணிக் ராலா மற்றும் டி.எம். சுமனாவதி ஆவர். சந்தேக நபர் சாலியவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நாளை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

புத்தளம் பதில் நீதவானால் சடலத்தின் இடப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதே நேரத்தில் புத்தளம் ஆதார மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.