ஒரு நாள் மாத்திரம் சர்வதேச விமான நிலையமான அநுராதபுர விமான நிலையம்!


இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இராமேஸ்வரம் நோக்கிப் பயணிக்க அநுராதபுரம் விமான நிலையம் 2025 ஏப்ரல் 6 ஆம் திகதிக்கு மாத்திரம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டது.

இந்திய பிரதமர் மற்றும் அவரது குழுவினருக்கு தேவையான குடிவரவு மற்றும் வெளியேறுதல் வசதிகளை வழங்கும் நோக்கில், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் சாகர கொடகதெனிய தலைமையில், இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.

இலங்கையில் தற்போது சர்வதேச விமான நிலையங்களாக செயற்படும் விமான நிலையங்களாக; கொழும்பு பண்டாரநாயக்க, இரத்மலானை, மத்தள, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகியவை திகழ்கின்றன. இவை தவிர, பிற விமான நிலையங்களில் சர்வதேச விமானப் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், பிரத்யேக தேவைக்காகவே அநுராதபுரம் விமான நிலையம் ஒரு நாளுக்கு மாத்திரம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது.

சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பிரகடனத்தின் படி, அநுராதபுரம் விமான நிலையத்தில் பல விமானங்களை தரிக்க வைக்கும் வசதிகள் இல்லாமல் போனாலும், பிரதமர் மற்றும் குழுவினரின் பயணத்திற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஆலோசனைக்கிணங்க உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அநுராதபுரம் விமான நிலையம் வழியாக இலங்கையை விட்டு புறப்பட்ட நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட குழுவினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக வெளியேறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.