5 வயதுக்கு குறைந்த குழந்தைகள் இறந்தால் கட்டாய பிரேத பரிசோதனை நடத்த அரசாங்கம் உத்தரவு..!
5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளின் மரணங்களும் கட்டாயமாக பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கு (Coronor) நீதி மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சு சுற்று நிருபம் மூலம் உத்தரவிட்டுள்ளது.
சிறுவர்களின் மரணங்களுக்கான காரணங்களைக் கண்டறிவதற்கு இது அத்தியாவசியமானது எனவும் காரணங்களைக் கண்டறிவதன் மூலம் இறப்புக்களைக் குறைக்க முடியும் எனவும் நீதி அமைச்சின் சுற்றறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
இவ்வாறான ஆய்வுகள் மூலம் இலங்கையில் தாய்மார் மரண வீதமும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போதுள்ள நடைமுறைப்படி ஒரு குழந்தையின் மரணம் சந்தேகத்துக்குரிய காரணங்களாலோ சந்தேகத்துக்குரிய சூழ்நிலையிலோ அல்லது விபத்தாகவோ நிகழ்ந்தால் மாத்திரமே பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. அதுவும் பெற்றோருடைய அனுமதி பெற்றே மேற்கொள்ளப்படுகிறது.
மரணத்துக்கான காரணம் நிர்ணயம் செய்யப்பட்டு மருத்துவ அறிக்கை வழங்கப்பட்ட குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை. அது அவசியமற்ற ஒன்றாகவும் பணம் மற்றும் வளங்களை வீணாக விரயமாக்கும் செயலாகவும் மருத்துவர்களால் கருதப்படுகிறது. பிரேத பரிசோதனையொன்றுக்கு அண்ணளவாக 15,000 ரூபா செலவாகிறது.
இந்நிலையில் அரசாங்கம் விடுத்துள்ள இந்த உத்தரவு பல சட்ட சிக்கல்களையும் சமூக, உளவியல் பிரச்சினைகளையும் தோற்றுவித்திருக்கிறது.
பிரேத பரிசோதனையை கட்டாயப்படுத்தும் நடைமுறைகள் உலக நாடுகளில் பொதுவாகக் காண முடியாத ஒரு நடைமுறையாகும். சந்தேகத்தின் பேரில் மட்டும், உரியவர்களின் அனுமதியுடன் பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறையே உலகின் பெரும்பாலான நாடுகளில் பின்பற்றப்படுகின்றது.
இங்கிலாந்தின் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் சடுதியான, எதிர்பாராத மரணங்கள் (SUDIC) தொடர்பிலான வழிகாட்டல்கள், சந்தேகம் இருந்தால் மட்டுமே பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு கூறுகிறது.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சுவீடன், நோர்வே என எல்லா நாடுகளும் சந்தேகத்துக்கு இடமான மற்றும் விபத்து மரணங்களை மட்டுமே பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் நடைமுறையை மேற்கொள்கின்றன.
இறக்கின்ற அனைவரையும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதை எந்த நாடும் கட்டாயப்படுத்தவில்லை. இந்த நிலையிலேயே இலங்கையின் நீதியமைச்சு 5 வயதுக்கு குறைவான வயதில் மரணித்த அனைவரையும் கட்டாய பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் இதற்கு முன்னரும், கொரோனாவால் மரணித்தவர்களை அடக்கம் செய்ய முடியும் என்ற முழு உலகினதும் நடைமுறையை மீறி அரசாங்கம் பலவந்த எரிப்புக்கு உத்தரவிட்டிருந்தது. இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியமை சுட்டிக்காட்டத்தக்கது.