அரச ஊழியர்களுக்கு 50,000 ரூபா சம்பள அதிகரிப்பு!


இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை ரூ.50,000 வரை அதிகரிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதை தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

‘‘அரச ஊழியர்களுக்கான தற்போதைய சம்பள அதிகரிப்பால் மக்களுக்கு பயன் இல்லை. கடந்த 77 ஆண்டுகளாக தேங்காய் ஒன்றின் விலை ரூ.80 முதல் ரூ.100 வரை இருந்தது. ஆனால் இப்போது நாடு மிகவும் கடினமான பொருளாதார சூழலில் உள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை ரூ.25,000 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தார். ஆனால் தற்போதைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு சம்பளம் ரூ.50,000 வரை அதிகரிக்கப்பட வேண்டும்.

அரச துறையிலேயே மட்டுமல்லாது, நாட்டின் அனைத்து துறைகளும் பொருளாதார சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மத்திய நிலை அரச ஊழியர்கள் சம்பள அதிகரிப்பில் பெரும் அநீதியை சந்தித்து வருகின்றனர்.

முந்தைய காலங்களில் ரூ.2 இலட்சத்திற்கு மோட்டார் சைக்கிள் வாங்க முடிந்தது. இன்று அதற்கே ரூ.6 முதல் 7 இலட்சம் வரை செலவாகிறது. தவணை அடிப்படையில் வாங்கினால் முன்பு மாதம் ரூ.12,000 மட்டுமே கட்ட வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அந்த தொகை ரூ.40,000 வரை உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இதன் விளைவு வரும் டிசம்பர் மாதத்திற்குள் தெளிவாக தெரியவரும். இலங்கையின் வரலாற்றில் மிகவும் கடுமையான பொருளாதார நிலையை எதிர்கொள்ளும் சூழல் உருவாகும் என என் அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் கூற விரும்புகிறேன்’’ என  வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.