சீருடை தவிர்ந்த ஏனைய உடைகள் அணிந்தும் பாடசாலை வர அனுமதி!
எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் பாடசாலைகளிலுள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் அனைவரும் டிசம்பர் 15 ஆம் திகதி சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.
இன்று (09) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் சீருடை விடயத்தில், தளர்வான கொள்கை பின்பற்றப்படும் என அவர் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியிலுள்ள 10,076 பாடசாலைகளில், 9,929 பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி திறக்கப்படும்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு, உடனடியாகத் திறக்க முடியாத நிலையில் 147 பாடசாலைகள் உள்ளன.
அதற்கமைய, மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊவா மாகாணத்தில் 26 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 6 பாடசாலைகளும், மத்திய மாகாணத்தில் 115 பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படாது எனவும் அறிவித்தார்.
மாகாண மட்டத்தில் பெறப்படும் இறுதி தகவல்களின் அடிப்படையில், இந்த எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தொடர்ச்சியாக உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இதேவேளை 5 முதல் 10 வரையான தரங்களுக்கு இம்முறை மூன்றாம் தவணைக்கான பரீட்சை நடத்தப்பட மாட்டாது எனவும், மாணவர்கள் அடுத்த தரங்களுக்கு வகுப்பேற்றப்படுவார்கள் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
அத்துடன் 11 ஆம் தரத்துக்கு மாத்திரம் மாதிரி பரீட்சையொன்று நடத்தப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் பெப்ரவரி 14 முதல் மார்ச் 02ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
