Lemon வால் நட்சத்திரத்தை இலங்கையர்களும் காணும் வாய்ப்பு!
‘Lemon’ என்றும் அழைக்கப்படும் ‘C/2025 A6’ வால் நட்சத்திரத்தை தற்போது மாலை வானில் இலங்கையர்களும் காண முடியும் என்று விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர், மாலை 6.30 மணி முதல் சுமார் 30 தொடக்கம் 45 நிமிடங்கள் வரை இந்த வால் நட்சத்திரம் அடிவானத்திற்கு அருகில் தெரியும்.
மழை இல்லாத தெளிவான மாலை நேரங்களில் இலங்கையின் மேற்கு கடற்கரையிலிருந்து இந்த வால் நட்சத்திரத்தை எளிதாகக் காணலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.
2025 ஜனவரி மாதம் அமெரிக்காவில் உள்ள மவுண்ட் லெமன் ஆய்வகத்தில் இந்த வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டமையினால் அதற்கு Lemon என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது சுமார் 90 மில்லியன் கிலோ மீட்டர்கள் அல்லது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தில் சுமார் 60% தூரத்திற்குள் உள்ளது.
இது தற்போது அதன் முதன்மையான பார்வைத் திறனில் உள்ளது.
நாசாவின் கூற்றுப்படி, Lemon வால் நட்சத்திரம் சுமார் 1,350 ஆண்டுகளுக்குப் பின்னர் நமது சூரிய மண்டலத்திற்குள் திரும்பி வருகிறது.
இது நவம்பர் 8 ஆம் திகதி சூரியனுக்கு மிக அருகில், சுமார் 80 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் வரும்.
பொதுவாக, வால் நட்சத்திரங்கள் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும்போது பிரகாசமாக பிரகாசிக்கும்.
இருப்பினும், Lemon வால் நட்சத்திரம் அதற்கு முன்பே பூமியை நெருங்கும் என்பதால், அது இரவு வானத்தைக் கடக்கும்போது அதன் பிரகாசத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
