தீவிர புயல் எச்சரிக்கை; கடற்கரை பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள்!
'முரசு' புயல் நாளை (03) அதிகாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
தீவிர புயல் கரையை நெருங்கும் நிலையில், கிழக்கு கடற்கரை பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியை அதிகாரிகள் இன்று தொடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வாரம் 'அர்னாப்' புயலால் பாதிக்கப்பட்ட அதே பகுதியில் மீண்டும் புயல் தாக்க உள்ளதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அர்னாப் புயலை விட முரசு புயலின் தீவிரம் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த வார புயலுக்கு 6 பேர் உயிரிழந்ததுடன், பல வீடுகள் மற்றும் பயிர்கள் அழிந்தன.
இது தொடர்பாக ஆந்திர பேரிடர் மேலாண்மை ஆணைய நிர்வாக இயக்குநர் பிரகர் ஜெயின் கூறுகையில், "இதுவரை சுமார் 2,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த பணி தொடர்கிறது. மொத்தம் 30,000 பேரை வெளியேற்ற திட்டமிட்டுள்ளோம்" என தெரிவித்தார்.
வங்காள விரிகுடாவில் உருவான இந்த புயலால் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில கடலோர பகுதிகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என IMD எச்சரித்துள்ளது.
