அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்
வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச துறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் தற்போதைய வாழ்வாதாரச் செலவு அதிகரிப்பு மற்றும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், அரச ஊழியர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் இந்த பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, கடந்த சில ஆண்டுகளாக நிலவும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு அரச ஊழியர்களின் மாதாந்த அடிப்படை சம்பளம் அல்லது இடைக்கால கொடுப்பனவுகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அண்மையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சம்பள ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற 12,000-க்கும் அதிகமான மனுக்களை பரிசீலித்து இந்த முதற்கட்ட யோசனைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், அஸ்வெசும போன்ற சமூக நலன்புரி திட்டங்களின் கீழ் பயன்பெறும் குடும்பங்களுக்கான நிதியுதவிகளை அதிகரிப்பதற்கும், மேலும் பல குடும்பங்களை இணைப்பதற்கும் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன், 2020-2024 காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளின் ஓய்வூதிய கொடுப்பனவுகளில் நிலவும் முரண்பாடுகளை களைந்து, அவற்றை சீரமைக்கவும் வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
