வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
2027ஆம் ஆண்டு நடுப்பகுதியில் வடக்கு உள்ளிட்ட நான்கு மாகாணங்களுக்கான மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய நான்கு மாகாணங்களிலும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு அதிருப்தி
மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்ச்சியாகப் பிற்போடப்பட்டு வருகின்றமை மற்றும் இது தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட மற்றும் நிர்வாக ரீதியிலான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக, நாடாளுமன்ற விசேட செயற்குழுவில் ஐந்து தடவைகள் முன்னிலையாகி பல்வேறு யோசனைகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், குறித்த பரிந்துரைகளுக்கு அமைய இதுவரையில் சாதகமான தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிருப்தி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் அறிக்கை எப்போது?
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழு கடந்த செப்டெம்பர் மாதம் தனது பரிந்துரை அறிக்கையைச் சமர்ப்பிப்பதாக அறிவித்திருந்தது.
இருப்பினும், திட்டமிட்ட காலப்பகுதியில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்நிலையில், செயற்குழுவின் செயற்பாட்டுக் காலம் எதிர்வரும் மாதம் 17ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினத்திலாவது அறிக்கை சமர்ப்பிக்கப்படுமா என தேர்தல்கள் ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.
தேர்தலை நடத்த அரசாங்கம் உறுதி
இதற்குப் பதிலளித்த அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர், மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்ட பின்னர் தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய நான்கு மாகாணங்களுக்கான தேர்தல்களை 2027ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் அடிப்படைச் சட்ட மற்றும் நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் தேர்தலை நடத்தினால், மாகாண நிர்வாகக் கட்டமைப்பில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படக்கூடும் என்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், நீண்டகாலமாகப் பிற்போடப்பட்டு வரும் மாகாணசபைத் தேர்தல்கள் 2027ஆம் ஆண்டு நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
