முதன்முறையாக ஆண் அரசு ஊழியர்களுக்கும் தந்தையர் மகப்பேறு விடுப்பு! மகிழ்ச்சியில் ஆண்கள்!
தமிழ்நாடு அரசு ஆண் பணியாளர்களுக்கு முதன்முறையாக 15 நாட்கள் தந்தையர் மகப்பேறு விடுப்பு (Paternity Leave) வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், ஆண் அரசு ஊழியர்களுக்கும் தந்தையர் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசுப் பணியாளர்களிடமிருந்து அரசுக்குக் கிடைக்கப்பெற்றது.
குழந்தை பிறக்கும் காலகட்டம் என்பது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் மிகவும் முக்கியமானதாகும். இக்காலகட்டத்தில் தாய்க்கு உடல் மற்றும் மனரீதியான ஆதரவு வழங்குவதுடன், குழந்தையைப் பராமரிப்பதிலும் தந்தையின் பங்களிப்பு அவசியமாகிறது.
பெண் அரசு ஊழியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவது தாய்மை மற்றும் குழந்தை நலனுக்கு அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
அதேபோல், ஆண் அரசு ஊழியர்களுக்கும் தந்தையர் மகப்பேறு விடுப்பு வழங்குவது குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளவும், குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் உதவும்.
இதனைத் தொடர்ந்து, திருமணமான ஆண் அரசு ஊழியர்களுக்கு மனைவியின் மகப்பேறு காலத்தில் உடனிருந்து ஆதரவளிக்கும் வகையில் 15 நாட்கள் தந்தையர் மகப்பேறு விடுப்பு வழங்கித் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த விடுப்பை குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை அங்கீகரிக்கும் இந்த அறிவிப்பு ஆண் அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.