வாழ்க்கைச் செலவு உயர்வு: அரச, தனியார் ஊழியர்கள் அதிரடி போராட்டம் – 25,000 ரூபாய் கொடுப்பனவு கோரி களமிறங்கும் தொழிற்சங்கங்கள்!
நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 25,000 ரூபாவால் அதிகரிக்கக் கோரி பாரிய தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அடுத்த வாரம் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
வரவு - செலவுத் திட்டத்தில் ஏமாற்றம்!
அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு - செலவுத் திட்டம் நாட்டுக்கும் மக்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் ஒட்டுமொத்த தொழிலாளர் சமூகத்துக்கும் போதிய நிவாரணங்களை வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில சிறிய சம்பள அதிகரிப்புகளை அறிவித்துவிட்டு, மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் காட்டிக்கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
நீதித்துறை, சிறைச்சாலைகள் திணைக்களம், பொலிஸ், இராணுவம் மற்றும் சுகாதாரத் துறையின் சில பிரிவினருக்கு சம்பள அதிகரிப்புகளும் மேலதிக கொடுப்பனவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
எனினும், அவற்றில் சில 2027ஆம் ஆண்டிலும், ஏனையவை 2028ஆம் ஆண்டிலும் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தற்போதைய வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு அவை தீர்வாக அமையாது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், விலைவாசி அதிகரிப்பு 8.3 சதவீதமாகக் காணப்படும் நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு 2.9 சதவீதம் என்ற அளவிலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் சம்பள உயர்வின் மூலம் கிடைக்கும் நன்மைகளை விலைவாசி அதிகரிப்பு ஈடுசெய்துவிடும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் எதிர்காலம் குறித்து கவலை
நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழலில் இளைஞர்களுக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் வரவு - செலவுத் திட்டத்தில் போதியளவில் இடம்பெறவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறிப்பாக, 15 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட சுமார் 18 இலட்சம் இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திடம் போதிய நிதி இருப்பின், அதனை உழைக்கும் மக்களின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அந்த வகையில், அரச, அரை அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்படும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 25,000 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்பதே தொழிற்சங்கங்களின் பிரதான கோரிக்கையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வாரம் பாரிய போராட்டம்!
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் தரப்பினரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதனைக் கருத்திற்கொண்டு, தனித்தனியாக முன்னெடுக்கப்படும் தொழிற்சங்கப் போராட்டங்களை ஒன்றிணைத்து, அடுத்த வாரத்தின் நடுப்பகுதி அல்லது இறுதிப் பகுதியில் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றுதிரட்டி பாரிய போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு உரிய பதிலை வழங்கத் தவறினால், எதிர்காலத்தில் போராட்டங்கள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
