சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க விரிவான திட்டம்!


இலங்கையின் சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் அதிக கைதி அடர்த்தியைக் குறைப்பதற்கான முறையான திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பில், பொது நிர்வாகம், நீதி மற்றும் குடிமைப் பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நஜித் இந்திகா தலைமையில் அண்மையில் கூடிய இக்குழு, சிறைச்சாலை நிர்வாகத்தை மேம்படுத்துதல், கைதிகளின் எண்ணிக்கையைக் குறைத்தல் மற்றும் தற்போதைய சவால்களுக்கு தீர்வு காணுதல் தொடர்பில் ஆராய்ந்தது.

இதன்போது, சிறை அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், கைதிகளை தேவைக்கேற்ப வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுதல், சிறைச்சாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் செயல்திறனை அதிகரித்தல், புதிய சட்ட திருத்தங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், விஷங்கள், அபின் மற்றும் அபாயகரமான போதைப்பொருட்கள் தொடர்பான அவசரச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை வேறுபடுத்தி அணுக வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறைத்தண்டனைக்கு பதிலாக வீட்டுக் காவலில் வைப்பதற்கான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, பெண் கைதிகள் மற்றும் அவர்களுடன் சிறைகளில் தங்கியுள்ள ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நலன் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. குழந்தைகள் ஐந்து வயதை அடைந்த பின்னர் அவர்களுக்கான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது.

போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வு, அவர்களை மீண்டும் சமூகத்துடன் இணைத்தல் மற்றும் பிணைத்தொகையை செலுத்த முடியாத காரணத்தால் சிறையில் உள்ளவர்களுக்கு மாற்று நடவடிக்கைகளை வழங்குதல் போன்ற விடயங்களும் இதன்போது ஆராயப்பட்டுள்ளன.