கல்வி மறுசீரமைப்பு சர்ச்சை; உடனடி தீர்வு இல்லாவிடின் போராட்டம் வெடிக்கும் - இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை!
இலங்கையில் முன்னெடுக்கப்படும் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக முறையான தீர்வு வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் பாரிய எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட நேரிடும் என கல்வி தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதற்கிடையில், கல்வி மறுசீரமைப்புகளுக்கு எதிரான மக்கள் போராட்ட அமைப்பு நேற்று முன்தினம் கிரிபத்கொடையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. அரசாங்கத்தின் புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடத்திட்டங்களில் மாணவர்களுக்கு பொருத்தமற்ற இணையதள முகவரிகள், எழுத்துப்பிழைகள் மற்றும் உள்ளடக்கத் தவறுகள் காணப்படுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நேற்று (12) தங்களது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
“இந்த கல்வி மறுசீரமைப்பு எங்களுக்குரியது என்று கூறி, ஆணவமாக அதை முன்னெடுக்க முடியாது. பாடப்புத்தகங்களில் உள்ள இணைய முகவரிகள் மட்டுமல்ல, முழு மறுசீரமைப்பு செயல்முறையிலும் பாரிய சிக்கல்கள் உள்ளன”
என்று தெரிவித்தார்.
அதேபோல், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வல பஞ்ஞாசேக தேரர், கல்வி அமைச்சரின் மூலம் தீர்வு கிடைக்காது என்பதால் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாக கூறினார்.
“ஜனாதிபதியின் நிலைப்பாட்டை அறிந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுப்போம்”
என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் செயலாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க,
“அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முழு பாடத்திட்டத்திலும் கடுமையான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவ்வாறு கல்வி மறுசீரமைப்பை முன்னெடுக்க முடியாது. உடனடியாக இந்த நடவடிக்கைகளை நிறுத்தி, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி நாட்டுக்கு ஏற்ற கல்வி மறுசீரமைப்பை உருவாக்க வேண்டும்”
என்று வலியுறுத்தினார்.
இந்த வாரத்துக்குள் அரசாங்கம் தெளிவான தீர்மானமொன்றை எடுக்காவிட்டால், அடுத்த வாரம் கல்வித்துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்புகளையும் இணைத்து பாரிய எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
