கல்விச் சீர்திருத்த முறைகேடு: கையூட்டல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய ஐக்கிய மக்கள் சக்தி முடிவு!
இலங்கையில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் அதற்கான பாடத் தொகுதிகள் தயாரிப்பில் இடம்பெற்ற நிதி விரயம் தொடர்பாக, கையூட்டல் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன கவிரத்ன, இந்தச் சீர்திருத்தச் செயல்முறை மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரகசியமாக நடந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பாடப்புத்தகங்கள் அச்சிடுதல், விநியோகம் மற்றும் அது சார்ந்த பணிகளுக்காக செலவிடப்பட்ட கோடிக்கணக்கான வரிப்பணம் தற்போது வீணாகியுள்ளது. இதற்குக் காரணமானவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஐக்கிய மக்கள் சக்தி ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருந்தும், தம்மை இந்தச் செயற்பாட்டில் இணைத்துக்கொள்ளவில்லை என ரோஹினி கவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
சீர்திருத்தங்களைத் தயாரிக்கும் தேசிய கல்வி நிறுவனத்தின் முக்கிய பதவிகளில் இருப்பவர்களின் தகைமைகள் குறித்து ரோஹினி கவிரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ கருத்து வெளியிடுகையில், இந்தச் சீர்திருத்தங்களுக்காக இதுவரை சுமார் ஒரு பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இந்த இழப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்தே மீளப் பெற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
