பிரதமர் ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் சபாநாயரிடம் சமர்ப்பிப்போம் - எதிர்க்கட்சி அறிவிப்பு!
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் வாரம் சபாநாயரிடம் சமர்ப்பிக்கவுள்ளோம். நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளுமாறு கட்சித் தலைவர் கூட்டத்தில் வலியுறுத்தவுள்ளோம் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஆறாம் தர பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய விடயம் உள்ளடக்கப்பட்டதை சுட்டிக்காட்டி பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும்.
அப்போது தான் இந்த முறைகேடு தொடர்பில் முறையான விசாரணை இடம்பெறும் என்பதை வலியுறுத்தினோம். இருப்பினும் பிரதமர் கல்வி அமைச்சு பதவியில் இருந்து விலகவில்லை.
பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்தோம்.
நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளார்கள். எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளார்கள்.
நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கையொப்பம் பெறும் நடவடிக்கையை கடந்த சனிக்கிழமை களுத்துறை மாவட்டம் மத்துகம நகரில் இருந்து ஆரம்பித்தோம். சகல மாவட்டங்களிலும் கையொப்பம் பெறுகிறோம்.என்றார்.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை எதிர்வரும் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காலம் போதாது என எதிர்க்கட்சிகள் கருதினால் மற்றொரு தினத்தையும் வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்து அதனை வெற்றி கொள்வது மாத்திரம் அரசாங்கத்தின் நோக்கமல்ல. விவாதத்தின் போது பல விடயங்களை மக்களுக்கு வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக நாம் இதனைப் பயன்படுத்திக் கொள்வோம் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுஇடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் இடம்பெற்ற மற்றும் இடம்பெறவுள்ள மாற்றங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான பிரச்சினைகளை எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படும் போது தீர்த்துக் கொள்ள முடியும்.
தற்போது இரு நாட்கள் விவாதத்துக்கு நாம் தயாராகவுள்ளோம். இரு நாட்கள் விவாதத்துக்கு போதாது எனில் மேலும் நாட்களை வழங்கவும் அரசாங்கம் தயாராகவுள்ளது. விவாதத்தின் போது உண்மையான யதார்த்தங்களை எம்மால் பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்த முடியும் என்றார்.
