யாழில் மோசமடையும் காற்றின் தரம்; சுவாச நோய்கள் அதிகரிக்குமென எச்சரிக்கை!


யாழ்ப்பாணம் மாவட்டத்தின் காற்று மாசுபாட்டிற்கு உள்ளூர் காரணிகள் பல இருந்தாலும், எல்லை தாண்டி ஏற்படும் மாசுபாடே பிரதான காரணமாக உள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது சுவாச நோய்கள் அதிகரிக்கக் காரணமாகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ் மாவட்டத்தின் காற்றுத் தரம் மிக மோசமான நிலையில் காணப்படுவதாக கூறினார்.

குறிப்பாக, காற்றுத் தரக் குறியீடு (Air Quality Index) மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு குறைந்துள்ளதாகவும், தற்போது கொழும்பு மாவட்டத்திற்கு நிகரான அளவில் காற்று மாசுபாடு நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலைமைக்கு இந்தியா போன்ற பெரும் நிலப்பரப்புகளில் இருந்து வரும் வளிமண்டல மாசுபாடுகளும் முக்கிய காரணமாக உள்ளதாகத் தெரிவித்தார். இதன் விளைவாக, யாழ்ப்பாணத்தின் காற்றுத் தரக் குறியீடு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் அளவிற்கு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால், வளிமண்டல உணர்திறன் மிக்கவர்களுக்கு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாச நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.