கல்வி அமைச்சு பதவியிலிருந்து பிரதமர் ஹரிணி உடன் விலக வேண்டும்! - உதய கம்மன்பில பகிரங்கம்!


பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சுப் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பு என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்துவதாகக் கூறி, அரசாங்கம் நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்துக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

ஆறாம் தர பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் இணைக்கப்பட்டிருந்த வலைத்தள முகவரி தற்போது முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் புகையிரத விபத்து ஒன்று ஏற்பட்டால்கூட சம்பந்தப்பட்ட போக்குவரத்து அமைச்சர் பதவி விலகுவார். ஆனால் இலங்கையில் அதற்கான அரசியல் பொறுப்பு கலாசாரம் இல்லை எனவும் அவர் விமர்சித்தார்.

பாடசாலை பாடப்புத்தகத்தில் இவ்வளவு பாரதூரமான தவறு இடம்பெற்றிருந்தும், கல்வி அமைச்சுப் பொறுப்பில் உள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலகவில்லை. மாறாக, தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகியுள்ளார் எனக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் முறையற்ற செயல்பாடுகள் வெளிப்படும் போதெல்லாம், அரச அதிகாரிகள் மீது பழி சுமத்தி அவர்களை பதவி விலக்குவது தற்போது வழக்கமாகி விட்டதாகவும் அவர் சாடினார்.

பிரதமர் கல்வி அமைச்சராக பதவி வகிக்கும் வரையில், இந்த சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை நடைபெறும் என்ற நம்பிக்கை இல்லை என்றும்,

எனவே கல்வி அமைச்சுப் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்றும் உதய கம்மன்பில வலியுறுத்தினார்.