Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!


சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

சிரியாவின், மத்திய மாகாணத்தில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்தாரிகளையும் மற்றும் அவர்களின் கட்டமைப்புகள், தளவாடங்கள் ஆகியவற்றைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக, இன்று ( 20) அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

இந்த இராணுவ நடவடிக்கைக்கு, “ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்டிரைக்” எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், தாக்குதல்களில் ஏராளமான தாக்குதல்தாரிகள் கொல்லப்பட்டதாகவும், நடவடிக்கைகள் மேலும் தொடரும் எனவும் அமைச்சர் ஹெக்செத் கூறியுள்ளார்.

முன்னதாக, சிரியாவின் பல்மைரா பகுதியில், கடந்த டிச.13 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் சிரியாவின் இராணுவப் படைகள் மீது நடத்திய தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க இராணுவத்தின் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த இராணு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அமைச்சர் பீட் ஹெக்செத் அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியதாவது:

”இந்தத் தாக்குதல் போரின் துவக்கம் அல்ல, இது ஒரு பழிவாங்கும் பிரகடனம். உலகின் எந்தவொரு பகுதியில் இருந்தாலும் சரி நீங்கள் அமெரிக்கர்களைக் குறிவைத்தால் உங்களை அமெரிக்கா வேட்டையாடி கொல்லும். இன்று, நாங்கள் எங்களின் எதிரிகளை வேட்டையாடி கொன்றுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.