சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கற்களை ஏற்றுமதி செய்யும் சம்பவங்கள் அதிகரிப்பு!
சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கற்களை ஏற்றுமதி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
ஹிக்கடுவை பகுதியில் நடைபெற்ற மாணிக்கக்கல் மற்றும் ஆபரண வர்த்தகக் கண்காட்சியொன்றில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மாணிக்கக்கல் வர்த்தகர்களுக்குத் தேவையான உரிய வசதிகள் கிடைக்காததே இந்த நிலைமைக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்;
சட்டவிரோத முறையில் நாட்டிலிருந்து மாணிக்கக்கற்களை வெளியேற்றும் போக்கு அதிகரித்துள்ளது. ஏனெனில், சட்டபூர்வமான முறையில் பணிகளைச் செய்ய முற்படும்போது அதிக காலம் எடுக்கின்றது, மக்கள் அலையவிடப்படுகிறார்கள், இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது மற்றும் பல சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஒரே மாணிக்கக்கல்லுக்கு மூன்று நான்கு முறை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால்தான் மக்கள் சட்டபூர்வமான முறையைத் தவிர்த்துவிட்டு, சட்டவிரோத வழிகளில் கற்களை ஏற்றுமதி செய்யத் தூண்டப்படுகிறார்கள்.
இதனால் அந்த மாணிக்கக்கற்கள் மூலம் நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய முறையான வருமானம் பதிவாவதில்லை. இந்தத் தொழில்துறை ஒரு சுதந்திரமான தொழிலாக இல்லாமல் இருப்பதே இதற்குக் காரணம். இத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு இதில் நிலைத்திருக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துவதை விட, இத்தொழிலின் மீது வெறுப்பை உண்டாக்கும் நிலையே காணப்படுகிறது. இதனால் உண்மையான வருமானம் வெளிப்படுத்தப்படுவதில்லை. இதன் விளைவாக, நாட்டின் தேசிய உற்பத்தியில் 1 அல்லது 2 பில்லியன் டொலர்கள் வரை சேர வேண்டிய வருமானம், தற்போது 200 முதல் 300 மில்லியன் டொலர்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மாணிக்கக்கல் தொழில்துறையூடாகப் பெறக்கூடிய உண்மையான வருமானம் நாட்டுக்குக் கிடைக்கவில்லை. எமக்கு ஆண்டுதோறும் 200-300 மில்லியன் டொலர்கள் போன்ற மிகச்சிறிய வருமானமே கிடைக்கிறது. ஆனால், பெறுமதி சேர்ப்பு மற்றும் அபிவிருத்தி ஊடாக இதனைப் பாரிய வருமானமாக மாற்ற முடியும். இதற்காக முதற்கட்டமாக, பெறுமதி சேர்ப்புக்காக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மாணிக்கக்கற்களுக்கு, ஒரு பொதிக்கு (parcel) ஒரு வரி மாத்திரம் வசூலிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இனி எஞ்சியுள்ள இறுதிப் படிமுறை இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதாகும். புதிய ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இதனை நிறைவேற்ற முடியும் என நாம் நம்புகிறோம். அந்தப் பொதியில் உள்ள கற்களின் அளவு அல்லது பெறுமதியை நாம் கருத்தில் கொள்ள மாட்டோம்; எமது நோக்கம் மாணிக்கக்கற்களை இலகுவாக இலங்கைக்குள் கொண்டு வருவதாகும். அதன் மூலம் செய்யப்படும் பெறுமதி சேர்ப்பின் ஊடாகவே நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
