நாட்டில் அனர்த்தத்தால் அழிந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு, திருமணப் பதிவுச் சான்றிதழ்கள்!


நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. 

கிட்டத்தட்ட 2.2 மில்லியன் மக்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் மேற்குறித்த ஆவணங்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சுமார் 22 மாவட்டங்களில் பதிவுச் சான்றிதழ்கள் இலவசமாகவும் ஒரு நாள் துரித சேவை மூலமாகவும் வழங்கப்படுகின்றன. 

அதுமட்டுமின்றி அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதற்காக அரசின் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் சில பகுதிகளில் நடமாடும் சேவைத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்கள் இல்லாதவர்கள் குறித்த தரவுகள் மாவட்ட துணைப் பதிவாளர்களால் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 

அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் குறித்த ஆவணங்களை வழங்கும் பணியை நிறைவு செய்யத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.