துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கும் கால எல்லை நீடிப்பு!


துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வைத்துள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டிற்கான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

2025 செப்டம்பர் 01 முதல் டிசம்பர் 31 வரை மட்டுமே அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க முடியும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்ததாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக இந்தக் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2026 ஜனவரி 31 ஆம் திகதிக்குப் பின்னர் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி ஒன்றை வைத்திருப்பது துப்பாக்கிக் கட்டளைச் சட்டத்தின் 22 வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

மேலும், 2026/2027 ஆம் ஆண்டுகளுக்கான தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்களின் பதிவைப் புதுப்பிப்பதற்கான காலலெல்லையும் ஜனவரி 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த திகதிக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் புதுப்பித்தல்களுக்குத் தாமதக் கட்டணங்கள் அறவிடப்படுவதுடன், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.