நாட்டில் 8 மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்!


நாட்டில் 8 மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

டெங்கு பரவலைக் குறைப்பதற்கான பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதே நோய் அதிகரிப்பதற்கு காரணமென சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித சுமனசேன தெரிவித்துள்ளார்.

பல மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் டெங்குவை உருவாக்கும் நுளம்பு குடம்பிகளின் பரவல் அதிகரித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம்  ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் டெங்கு நுளம்புகளின் அபாயம் அதிகரித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சில மாவட்டங்களில், நுளம்புகள்  இனப்பெருக்கம் செய்யும் இடங்களை  சுத்தம் செய்யுமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும்,  இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் போது, சுமார் 25-30 சதவீதம் பேர் இதில் ஆர்வம் காட்டவில்லை எனவும் தெரிவித்தார். 

மேலும், டெங்கு நோயை கட்டுப்படுத்த  மக்களிடையே ஆர்வம் இல்லாத காரணத்தினால், ஜனவரி முதல் வாரத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.