அரச சேவைக்கான முறையான சம்பளக் கட்டமைப்பை உருவாக்க இடைக்கால அறிக்கை தயாரிப்பு!


அரச சேவைக்கான முறையான சம்பளக் கட்டமைப்பை உருவாக்கவும், தொழில்சார் தரத்தை மேம்படுத்தவும் தேவையான திட்டம் மற்றும் முறையான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய இடைக்கால அறிக்கையைத் தயாரிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, இவ்விடைக்கால அறிக்கையை வரும் 13ஆம் திகதி பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

அரச சேவைக்கான முறையான சம்பளக் கட்டமைப்பையும் தொழில்தர மேம்பாட்டையும் உருவாக்குவதற்காக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சு நியமித்த உபகுழுவின் தலைவராக சந்தன சூரியாரச்சி விளங்குகிறார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, பல்வேறு தரப்பினரைச் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு, அவர்களின் கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் சேவைகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விரிவான புரிதலைப் பெற்றதாகவும் குறிப்பிட்டார்.

அதற்கமைய, அரச சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களுக்காக விஞ்ஞான ரீதியிலான, நியாயமான சம்பளக் கட்டமைப்பை உருவாக்குவது நோக்கமாகக் கொண்டு இடைக்கால அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாகவும், அதில் சேவைப் பிரமாணக் குறிப்புகள், ஆட்சேர்ப்பு நடைமுறைகள், பதவி உயர்வுகள் மற்றும் கொடுப்பனவுகள் குறித்த பரிந்துரைகளும் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.