5 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முனைந்த திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கைது!


திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது, இலஞ்ச ஆணை குழுவினால் இன்று (31) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக 500,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குச்சவெளி பிரதேச சபையின் தலைவர்  முபாரக் (50) மற்றும் அவரது தனிப்பட்ட சாரதி எம்.எம். இர்ஷாத் (34) ஆகியோரை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் குச்சவெளியின் இக்பால் நகர் பகுதியில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலஞ்ச ஆணைக்குழுவின் படி, பிரதேச சபைத் தலைவர் ஏற்கனவே 20 பேர்ச் காணி அனுமதிப்பத்திரத்திற்காக முறைப்பாட்டாளரிடமிருந்து 160,000 ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளார்.

பின்னர், மீதமுள்ள காணிப் பகுதிக்கு அனுமதிப்பத்திரம் வழங்க மேலதிகமாக 500,000 ரூபாவை கோரியுள்ளார்.

பிந்திய தொகையைப் பெற்றுக்கொண்டபோது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக நிலாவெளிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தலைவர், அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்து குச்சவெளி பிரதேச சபையை இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் (ITAK) இணைந்து கட்டுப்படுத்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.