தெற்காசிய தடகள போட்டிகளில் ஜொலித்த ஷஃபியா யாமிக் உள்ளிட்ட வீரர்களுக்கு கௌரவம்!
இந்தியா ராஞ்சியில் 2025 ஒக்டோபர் 24 திகதி முதல் மூன்று நாட்கள் நடைபெற்ற 4வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கள் திறமையை வெளிப்படுத்திய இலங்கை இராணுவ வீர, வீராங்கனைகள் நேற்று (30) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவை சந்தித்தனர்.
இந்த போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 59 வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர், அதில் 30 பேர் இலங்கை இராணுவ உறுப்பினர்கள் என்பது சிறப்பு அம்சமாகும்.
அந்த இராணுவ வீர வீராங்கனைகள் 12 தங்கம், 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 27 பதக்கங்களை இலங்கைக்கு வென்று தந்துள்ளனர்.
இந்த சிறப்பான விளையாட்டு வெற்றிக்காக பங்களிப்பு வழங்கிய அனைத்து வீர, வீராங்கனைகளுக்கும் இராணுவத் தளபதி தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவர்களின் எதிர்கால விளையாட்டு முன்னேற்றத்திற்காக ரூ. 6 மில்லியனுக்கு மேற்பட்ட விசேட நிதியுதவியும் வழங்கினார்.
இதன்போது பதக்கம் வென்ற 18 வீர, வீராங்கனைகளுக்கு அவர்களின் அடுத்த நிலைக்கான நிலை உயர்வும் இராணுவத் தளபதியினால் வழங்கப்பட்டது.
Tags:
இலங்கை செய்தி
