பல்கலைக்கழகத்தில் புதிதாக சேர்ந்த மாணவரை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று, கடுமையான காயத்தை ஏற்படுத்தி ராக்கிங் செய்த நால்வர் கைது!


குளியாப்பிட்டிய வடமேற்கு பல்கலைக்கழகத்தில் புதிதாக சேர்க்கை பெற்ற மாணவரை ராக் செய்து கடுமையாக காயப்படுத்தியதாகக் கூறி, நான்கு மாணவர்கள் குளியாப்பிட்டிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் குளியாப்பிட்டிய நீதவான் மிகில் சிரந்தன ஹதுருசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். சந்தேக நபர்கள் ஹெட்டிபொல, கட்டுபொல, மரகவிட்ட மற்றும் உக்குவெல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர் காயமடைந்த நிலையில் குளியாப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள், பாதிக்கப்பட்டவரை ரகசிய இடமொன்றிற்கு அழைத்துச் சென்று, அவரது ஆடைகளை அகற்ற முயன்றபோது அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதனைத் தொடர்ந்து அவரை தாக்கியதாகவும் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது.

போலீசார் அடையாள அணிவகுப்பு நடத்த முயன்றபோதிலும், சந்தேக நபர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர்கள், புகார்தாரரும் சந்தேக நபர்களும் ஒரே பல்கலைக்கழக மாணவர்கள் என்பதால் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள் என்றும், எனவே அடையாள அணிவகுப்பு தேவையில்லை என்றும் வாதிட்டனர்.

வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்ற நீதவான், வழக்கின் அடுத்த நாளில் சந்தேக நபர்களை மீண்டும் ஆஜர்படுத்த சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.