இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 200 குழந்தைகள் வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைவதாக தகவல்!
இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 200 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைவதாக, தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்துடன் (NCCP) இணைந்த ஆலோசக சமூக மருத்துவரான வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
முறையான மருத்துவ சிகிச்சையின் மூலம் இந்த நிலைமையை குறைக்க முடியும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
வைத்தியர் சுராஜ் பெரேரா, சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த கருத்துகளை பகிர்ந்தார்.
அவர் கூறியதாவது;
2022ஆம் ஆண்டில், பதிவாகிய மொத்த புற்றுநோயாளர்களில் 904 பேர் குழந்தைகளாக இருந்தனர்.
கடந்த 15 ஆண்டுகளாக தரவுகளை ஆராய்ந்தால், குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவது கணிசமாக அதிகரிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
பொதுவாக, இந்த எண்ணிக்கை 600 முதல் 800 வரையிலேயே இருந்து வந்துள்ளது.
தற்போது, ஆண்டுதோறும் சுமார் 900 குழந்தைகளுக்கு புற்றுநோய் பதிவாகிறது.
பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2019ஆம் ஆண்டில் சுமார் 200 குழந்தைகள் புற்றுநோயால் மரணமடைந்தனர்.
2020ஆம் ஆண்டு தரவுகளும் சேகரிக்கப்பட்ட போதிலும், இப்போது ஆண்டுக்கு சராசரியாக 200 குழந்தைகள் புற்றுநோயால் மரணமடைவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் குணமடையக்கூடிய சாத்தியமுள்ள நோயாளிகள், தாமதமாக கண்டறியப்பட்டதால் மரணமடைந்தவர்களும் உள்ளனர்.
இந்த மரணங்களை மேலும் குறைக்க முடியும். அதேபோல், சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவதன் மூலம் சிக்கல்களையும் குறைக்க முடியும்.