ஜனாதிபதி - பிரதமர் உள்ளிட்ட 31 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!


இலங்கை பிரஜைகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் இலங்கை அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி தீர்ப்பளிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் தாக்கல் செய்த இரண்டு மனுக்களை ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது.

இந்த மனுக்கள் இன்று பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தன.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனிஷ்க விதாரண, வழக்கை பரிசீலிப்பதற்கான விரைவான திகதியைக் கோரினார்.

அதன்படி, பிரதிவாதிகளுக்கு மீண்டும் அழைப்பாணை விடுக்குமாறு மனுதாரர்களின் சட்டத்தரணிகளுக்கு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு அறிவித்தது.

பின்னர் மனுவை ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.

இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சரவை உள்ளிட்ட 31 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

நாட்டின் பிரஜைகளுக்காக டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் திட்டம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

ஜனவரி 27 மற்றும் ஜூன் 2 ஆகிய திகதிகளில் இது தொடர்பாக இரண்டு அமைச்சரவை முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், இந்த அமைச்சரவை முடிவுகள் பொதுமக்களுக்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ தெரியப்படுத்தாமல் எடுக்கப்பட்டதாகவும் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் 2022 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதற்காக இந்த இரண்டு அமைச்சரவை முடிவுகளும் எடுக்கப்பட்டதாகவும் மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இலங்கை பிரஜைகளின் தனிப்பட்ட தரவுகள் இந்தியாவிற்கு கிடைக்கும் என்றும், இது இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட இந்தியாவுக்கு வாய்ப்பளிக்கும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

உள்நாட்டில் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கும் திட்டம் இந்நாட்டு ஆட்பதிவு திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் ஒதுக்கீட்டு செயல்முறைக்கு மாறாக, இந்திய நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முடிவு தன்னிச்சையானது மற்றும் சட்டத்திற்கு முரணானது என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இதன் ஊடாக இலங்கையின் இறையாண்மை, தேசிய பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தில் வௌிநாட்டு அரசாங்கம் தலையிட வாய்ப்பளிக்கும் என்றும், இது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறுவதற்கு வழிவகுக்கும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவுடன் தற்போதுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொடர்புடைய அமைச்சரவை முடிவுகளை வலுவற்றதாக்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், இந்த அடையாள அட்டை திட்டத்தை செயல்படுத்துவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.