பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கு தந்தையின் பெயர் அவசியமில்லை!


குழந்தை பிறந்தவுடன் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும்போது பெற்றோர் திருமணம் முடித்துள்ளார்களா என்பது தற்போது கேட்கப்படுவதில்லை. 

தந்தையின் பெயர் இல்லாவிடினும், தாயின் குடும்ப வழி பெயர் மற்றும் விபரங்கள் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும் போது பயன்படுத்த முடியும். 

அதற்கான வசதிகள் காணப்படுகின்றன என்று மகளிர் விவகாரம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

குருணாகல் மாவத்தகம பகுதியில் கடந்த 17 ஆம் திகதியன்று பிறந்து இரண்டு நாட்களான சிசு ஒன்று வயல்வெளியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சமூகத்துக்கு ஒரு அறிவுறுத்தலை வழங்க வேண்டிய பொறுப்பு மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சுக்கு உண்டு.

பெண்கள் தந்தையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் அல்லது பொறுப்பேற்க முடியாத நிலையில் குழந்தையை பிரசவிக்க நேரிட்டால் பாரதூரமான சுகாதார பாதிப்புக்கும், சமூக நெருக்கடிகளுக்கும் உள்ளாக நேரிடும். 

ஆகவே இவ்வாறான சம்பவங்கள் குறித்து அமைச்சுக்கு பாரியதொரு பொறுப்பு காணப்படுகிறது.

பொறுப்பேற்க முடியாத நிலை மற்றும் உறுதிப்படுத்த முடியாத சூழல் ஆகிய காரணிகள் பெண்கள் அச்சமடைந்து இவ்வாறு தாம் பெற்ற குழந்தையை கைவிட்டுச் செல்கிறார்கள். 

மனிதர்களின் உளவியல் தொடர்புகளை தடுக்க முடியாது. சட்டமியற்ற முடியாது.

இருப்பினும் அந்த உளவியல் ரீதியிலான தொடர்பில் பிரதிபலனாக பிள்ளைகளை பாதுகாப்பற்ற வகையில் விட்டுச் செல்லும் நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

குழந்தை பிறந்தவுடன் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் பதியும்போது பெற்றோர் திருமணம் முடித்துள்ளார்களா என்பது தற்போது கேட்கப்படுவதில்லை. 

தந்தையின் பெயர் இல்லாவிடினும், தாயின் குடும்பவழி பெயர் மற்றும் விபரங்கள் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும் போது பயன்படுத்த முடியும். 

அதற்கான வசதிகள் காணப்படுகின்றன. பெண்கள் பிள்ளை பெற்றவுடன் அனைத்தையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.

பெற்ற குழந்தையை வளர்க்க முடியாவிடின் பிறிதொரு தரப்பினருக்கு அந்த குழந்தையை கையளிக்கும் சட்டத்திலான நிறுவன கட்டமைப்பு நாட்டில் உள்ளது. 

நீதிமன்ற கட்டமைப்பின் ஊடாக இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதற்கான வசதிகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் வழங்கப்படும்.

குருநாகல் மாவத்தகம பகுதியில் வயல்வெளியில் கைவிடப்பட்ட சிசு தற்போது வைத்தியசாலை கண்காணிப்பில் ஆரோக்கியமாக உள்ளது.

இந்த சிசுவின் தாயை தேடி விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தாயை கண்டுப்பிடித்தவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

இந்த தாய் மாத்திரம் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிடும் சமூக நிலையே காணப்படுகிறது. இந்நிலைமை மாற்றம் பெற வேண்டும் என்றார்.