யூ டியூப் சனல்களின் வருவாய்க்கு ஆபத்து?


வீடியோக்களை பதிவேற்றும் தளமான யூ டியூப், தனது பல்வேறு விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. 

இதில், மீண்டும் மீண்டும் பதிவேற்றப்படும் மற்றும் பலரும் ஏற்கனவே போட்ட வீடியோக்களை போட்டு வருவாய் ஈட்டுவது இனி இயலாது என்று கூறப்படுகிறது.

யூ டியூப் நிறுவனத்தின் வருவாய் தொடர்பான விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றமானது ஜூலை 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

அதன்படி, மீண்டும் மீண்டும் பதிவேற்றப்படும் வீடியோக்கள், பிரதி செய்யப்பட்ட வீடியோ அல்லது மிகப்பெரிய அளவில் தயாரிக்கப்பட்ட வீடியோ போன்றவை, வருவாய் ஈட்டுவதற்கு தகுதியற்றதாக அறிவிக்கப்படவிருக்கிறது.

அதாவது, அசல் உள்ளடக்கத்தை புதிதாக உருவாக்கும் படைப்பாளிகளுக்கு மட்டுமே வருவாய் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும், ஏற்கனவே உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களின் வீடியோக்களுக்கு குறைந்த மதிப்பீடு வழங்கப்படும் என்றும் யூ டியூப் தெரிவித்துள்ளது.

பார்வையாளர்களுக்கு எந்த மதிப்பும் இல்லாத அல்லது மிகக் குறைந்த மதிப்பைக் கொண்டிருக்கும் வீடியோக்களுக்கு இனி வருவாய் கிடைக்காது.

உண்மையான, புதிதாக உருவாக்கப்பட்ட வீடியோக்களுக்கு மட்டுமே யூ டியூப் சானலில் வருவாய் ஈட்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று, அதன் பக்கத்தில் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளது.