பஸ்களில் கடுமையாகும் சீட் பெல்ட் சட்டம்!


காலி மாவட்ட போக்குவரத்து குழு கூட்டத்தில்  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பேருந்துகளில் இருக்கைப் பட்டி அணிவது குறித்த விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த விதியை மீறும் பேருந்துகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

“ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,350 பேர் உயிரிழக்கின்றனர், மேலும் 6,000 பேர் படுகாயமடைகின்றனர். இதனால், போக்குவரத்து அமைச்சு 2025 மற்றும் 2026 ஆண்டுகளுக்கான புரட்சிகரமான பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, இருக்கைப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

2011 முதல் இந்தச் சட்டம் இருந்தாலும், பலர் இதைப் பின்பற்றுவதில்லை. அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில்  பயணிக்கும் பயணிகள் இருக்கைப் பட்டி அணியாமல் பயணிக்கின்றனர்,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆண்டு தோறும் ஏற்படும் 2,300 உயிரிழப்புகளை 2,000-ஐ விடக் குறைக்க இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

“செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் அனைத்து விரைவு நெடுஞ்சாலைகளிலும் இந்த விதி கடுமையாக அமல்படுத்தப்படும். இந்த விதி பயணிகளுக்கும் பொருந்தும். பெரும்பாலான பேருந்துகளில் ஏற்கனவே இருக்கைப் பட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, இந்தச் சட்டம் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

இதை மீறினால், பேருந்துகள் தடை செய்யப்படுவதோடு, அவற்றின் உரிமங்களும் ரத்து செய்யப்படும்,” என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டமாகக் கூறினார்.