இன்று ரஷ்யாவில் பல அடி உயரத்திற்கு எழுந்த சுனாமி பேரலைகள்!
இன்று அதிகாலை ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை சுனாமி தாக்கியுள்ளது.
சுமார் 4 அடி உயரத்திற்கு உயரத்திற்கு சுனாமி அலைகள் இந்த பகுதியை தாக்கியுள்ளன. எனவே மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்திருக்கின்றனர்.
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ரிக்டர் அளவில் 8.8 என நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. 8.8 என்பது ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆகும்.
எனவே வடக்கு பசிபிக் பிராந்தியத்திற்கு அலாஸ்கா, ஹவாய் மற்றும் நியூசிலாந்து வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எச்சரிக்கையை அடுத்து ஹவாய் தீவின் ஹோனோலுலுவில் சுனாமி அலாரங்கள் ஒலிக்க தொடங்கின.
ரஷ்யாவுக்கு முன்னதாகவே ஜப்பானின் இரண்டாவது மிகப்பெரிய மாவட்டமான ஹொக்கைடோவை சுனாமி அலைகள் தாக்கியுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.
ரஷ்ய பகுதிகளில் சுனாமி காரணமாக சேதம் ஏற்பட்டிருக்கிறது. உள்ளூர் கவர்னர் வலேரி லிமரேன்கோ சுனாமி குறித்து கூறுகையில், “பசிபிக் பெருங்கடலில் உள்ள ரஷ்யாவின் குரில் தீவுகளில் உள்ள முக்கிய நகரமான செவெரோ-குரில்ஸ்க் கடலோரப் பகுதியை முதல் சுனாமி அலை தாக்கியது.
மக்கள் பாதுகாப்பாகவும், மீண்டும் அலை வரும் அபாயம் நீங்கும் வரை உயரமான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஹவாய், சிலி, ஜப்பான் மற்றும் சாலமன் தீவுகளின் சில கடலோரப் பகுதிகளில் அலைகள் கடல் மட்டத்திலிருந்து 1 முதல் 3 அடி உயரத்திற்கு வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யா மற்றும் ஈக்வடாரின் சில கடலோரப் பகுதிகளில் பல அடி உயரத்திற்கு அதிகமான அலைகள் வரக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தநிலநடுக்கத்தால் ஹவாய் தீவுகளின் கடலோரப் பகுதிகளில்
சேதம் ஏற்படக்கூடும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது. “உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும்” என்றும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜப்பான் நேரப்படி காலை 8:25 மணிக்கு ஏற்பட்ட இந்த
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.0 ஆகப் பதிவானது என்று ஜப்பான் மற்றும் அமெரிக்க நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்தனர். பின்னர், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) இந்த நிலநடுக்கத்தின்
அளவை 8.8 ஆகவும், ஆழத்தை 20.7 கிலோமீட்டர் (13 மைல்) ஆகவும் கணித்துள்ளது. இந்த நிலநடுக்கம், 180,000 மக்கள் தொகை கொண்ட ரஷ்ய நகரமான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்கியில் இருந்து சுமார் 119 கிலோமீட்டர் (74 மைல்) தொலைவில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் மையம் கொண்டிருந்தது.
டாஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்கியில் உள்ள மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தெருக்களில் அலறியடித்து ஓடினர். வீடுகளுக்குள் இருந்த அலமாரிகள் சரிந்தன, கண்ணாடிகள் உடைந்தன, கார்கள், கட்டிடங்கள் குலுங்கின. மேலும், மின்சாரம் தடைபட்டதுடன், மொபைல் போன் சேவைகளும் செயலிழந்தன.
சக்கலின் தீவில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும், அவசர சேவைகள் முழுவீச்சில் செயல்பட்டு வருவதாகவும் டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தேசிய சுனாமி எச்சரிக்கை மையம், அலாஸ்கா அலூடியன் தீவுகளின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையையும், கலிபோர்னியா, ஓரிகான், வாஷிங்டன் மற்றும் ஹவாய் உட்பட மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி கண்காணிப்பையும் விடுத்துள்ளது.