செம்மணி மனித புதைகுழி விவகாரம்: அரசாங்க சார்பிலிருந்து சகல ஒத்துழைப்புக்களும் வழங்கப்படும்!


செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படக் கூடிய சகல ஒத்துழைப்புக்களும் வழங்கப்படுமென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

”செம்மணி – மனித புதைகுழி தொடர்பில் ஜூன் 29ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது தொடர்பில் அரசாங்கத்தின் அறிக்கை குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சினால் அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இது தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படக் கூடிய சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம்.

தற்போது இது தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் எம்மால் வேறு கருத்துக்கள் எதனையும் வெளியிட முடியாது. எனினும் இது குறித்த தகவல்கள் அரசாங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதேவேளை செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வின் போது நேற்றுடன் (03) குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் என மொத்தமாக 38 என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 34 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் புத்தகப்பை, பொம்மை, சப்பாத்து போன்ற பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் உலகளாவிய ரீதியில் குறித்த விடயம் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை இவ்வாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.