அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி தொடர்பில் கருத்துரைத்த அண்ணாமலை
கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தனக்கு எவ்விதப் பங்கும் இல்லை என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்துக்களையே ஒரு தொண்டனாக தான் வழிமொழிவதாகவும் அண்ணாமலை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுக- பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் என்னுடைய பங்கு இல்லை என்றாலும் என்னுடைய தலைவர்கள் பேசியதால் அதை நான் தூக்கிப்பிடித்தாக வேண்டும், என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: ‘நான் ஒரு பாஜக தொண்டன். இந்தக் கூட்டணி உருவாவதிலும், பேச்சுவார்த்தை நடத்துவதிலும் எனக்குப் பங்கு இல்லை. எனது தலைவர் அமித் ஷா சொல்வதைத்தான் நான் கேட்பேன். உள்துறை அமைச்சர் அமித்ஷா தினமலர், தினத்தந்தி, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளிதழ்களில் மிகத் தெளிவாக கூட்டணி குறித்துப் பேசிய பிறகு, ஒரு தொண்டனாக எனது கருத்தை மாற்றிக்கொண்டு, கூட்டணி ஆட்சி இல்லை என்று கூறினால், நான் இந்தக் கட்சியில் தொண்டனாக இருப்பதற்குத் தகுதியில்லை என்று அர்த்தம்.
என்னுடைய தலைவர் சொன்ன கருத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியாமல், என்னுடைய தலைவருடைய கருத்தை நான் வலுப்படுத்த முடியாமல், என்னுடைய தலைவர்கள் சொன்ன கருத்திலேயே நான் சந்தேகத்தை எழுப்பினால், இந்தக் கட்சியில் நான் தொண்டனாக இருக்கக் கூடாது. தலைவனாக இருக்கக் கூடாது.
ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் என்னுடைய பங்கு இல்லை என்றாலும் என்னுடைய தலைவர்கள் பேசியதால் அதை நான் தூக்கிப்பிடித்தாக வேண்டும். அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றும் வரை நானும் அதில் உறுதியாக இருப்பேன்.
அதிமுகவுக்கு இதில் மாற்றுக்கருத்து இருந்தால், அவர்கள் அமித் ஷாவுடன் பேசலாம் என்றும், பேசி ஒரு முடிவெடுக்கலாம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.