சோள விநியோகத்தை மேம்படுத்த ஐந்தாண்டு திட்டம்!
சோள விநியோகத்தை மேம்படுத்த ஐந்தாண்டு திட்டம் ஒன்றை சோள பணிக்குழு செயல்படுத்தும் என்று கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
சோள உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட சோள பணிக்குழுவின் முதல் தொழில்நுட்ப குழு கூட்டம் அண்மையில் (09) விவசாயிகள் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
2026 ஆம் ஆண்டில் கால்நடை உணவு உற்பத்தி மற்றும் மனித நுகர்வுக்கு 750,000 மெட்ரிக் தொன் சோளம் அவசியம் என்று சோள பயிர்ச்செய்கை தொடர்பான தலைவர் புத்திக அபேசிங்க இந்த நிகழ்வின்போது குறிப்பிட்டார்.
அதில், 485,000 மெட்ரிக் தொன் சோளம் உற்பத்தி செய்யப்படும் என்றும், 265,000 மெட்ரிக் டொன் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறைந்த உற்பத்தித்திறன், தரத்தை பராமரிப்பதில் உள்ள குறைபாடுகள், நிலையற்ற விற்பனை விலைகள், குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட சோளம் கிடைப்பது, கோழி உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் பொறுப்பான தரப்பினருக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாமை ஆகியவை சோள உற்பத்தியில் உள்ள சிக்கல்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
சோள விநியோகத்தை மேம்படுத்த ஐந்தாண்டு திட்டத்தை தயாரிப்பது என்பது பிரச்சினைகளை சமாளிப்பதற்கான ஒரு தனித்துவமான திட்டமாகுமென தெரிவித்துள்ளார்.