எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து; இழப்பீடாக 1 பில்லியன் டொலர் வழங்குமாறு உத்தரவு!


2021 மே மாதம் கொழும்பு கடற்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பொருளாதார இழப்புகளுக்கு எக்ஸ்-பிரஸ் பேர்ல் சரக்குக் கப்பலின் உரிமையாளருக்கான இழப்பீடு உத்தரவினை உயர் நீதிமன்றம் இன்று (24) பிறப்பித்தது.

அதன்படி, குறித்த கப்பலின் உரிமையாளர்கள் இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த இழப்பீட்டு தொகையானது, திறைசேரி செயலாளரிடம் வழங்கப்பட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவத்தைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்காததற்காக, அப்போது இந்த துறைக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் நாலக கொடஹேவவும் கடல்சார் மாசுக்கட்டுப்பாட்டு ஆணையமும் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிங்கப்பூர் கொடியுடன் வந்த எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் 2021 மே 20 அன்று தீப்பிடித்து, சில நாட்களின் பின்னர் கடலில் மூழ்கியது. இதனால் இலங்கையின் மேற்குக் கடற்கரையில் பில்லியன் கணக்கான பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் நச்சு இரசாயனங்கள் சிதறின. இந்தப் பேரழிவு கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் மீன்பிடி சமூகங்களையும் பேரழிவிற்கு உட்படுத்தியது.

குறித்த அனர்த்தத்தால் ஏற்பட்ட சேதத்திற்காக கர்தினால் மல்கம் ரஞ்சித் உட்பட பல தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்களில் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.